ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, கனிம வளத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கைத்தறித் துறை, நீர்வள ஆதாரத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மலைப்பகுதிகளில் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களில் சாலைகளை ஏற்படுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல், அடுக்குமாடி குடியிருப்புகளில் கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்குதல், மேலும் சாலை, குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர் (ஆசனூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்) உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.