காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.
அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலம் பகீரத மன்னனுக்கு இழந்த அரசாட்சியை மீண்டும் வழங்கிய தலமாகவும் இந்திரன் இந்திராணியை மணம்புரிய வரம்பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.
அதனால் இழந்த பதவிகளை மீண்டும் வழங்கிடும் தலமாகவும் திருமண பாக்கியம் வழங்கும் தலமாகவும் இத்திருக்கோயில் உள்ளது.
இந்த திருக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கிருத்திகை நாட்களிலும் வருகின்றனர். அதனால் ஞாயிறு, செவ்வாய், கிருத்திகை நாட்களில் நாள் முழுவதும் இத்திருக்கோயில் திறந்துள்ளது.
மேலும் சினிமா பிரபலங்கள், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட கலைத்துறையினர் பலரும் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
திருமண பரிகார தலமாகவும் வீடு கட்டுவதற்கு பிரார்த்தனை தலமாகவும் விளங்கும் இந்த திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு காலை 6மணிக்கு கருவறையில் 7 அடி உயரத்தில் காட்சியருளும் மூலவர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலித்திட பால் குட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்திலும் வள்ளி தெய்வானை குங்கும காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியருளினர்.
கந்த சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கும் காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டு ஒரு மணி நேரம் வரிசையில் சென்று முருகப் பெருமானை வழிபட்டனர்.
கார்த்திகை விரதமிருக்கும் பக்தர்கள் 108 முறை திருக்கோயிலை வலம் வந்து வழிபட்டனர். விரதமிருக்கும் பக்தர்களுக்கு பாயாசம், சர்க்கரைப் பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
மேலும் மோர், பானகம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
பக்தர்களின் பாதுகாப்புக்கு தற்காலிக மருத்துவ முகாம் வசதியும் செய்யப்பட்டிருந்தது.
கார்த்திகை தீப உற்சவ ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் அறிவுரையின்படி திருக்கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.