Close
டிசம்பர் 15, 2024 10:57 காலை

தேவகோட்டையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம்..!

நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள்

சிவகங்கை:

வருவாய் கோட்ட அளவில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,37 விவசாயிகளுக்கு ரூ.12.20 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அவலகக் கூட்டரங்கில் , வட்ட அளவில்,  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில்,
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள்.

அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது.

அதனை, மேலும் விரிவுபடுத்திடும் பொருட்டு, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், வருவாய் கோட்டளவில் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்றும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில் இன்றையதினம் தேவகோட்டை வருவாய் கோட்ட அளவில், இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை வன விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மேலும், விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுதவிக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும்,

குறிப்பாக இக்கூட்டத்தின் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து  துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்கள் உரிய விபரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், பரிசீலனையிலுள்ள கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணும் பொருட்டு, உரிய களஆய்வுகளும்  மேற்கொண்டு, அந்நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் என்.என்.552 கண்ணங்குடி, என்.என்.597அனுமந்தக்குடி மற்றும் என்.என்.535 நாகாடி ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சார்ந்த மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.8,71,650/- மதிப்பீட்டிலான நெல் பயிர் கடனுதவிக்கான ஆணைகளையும்,

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் ரூ.3,750/- மதிப்பீட்டில் காய்கறி சாகுபடியினை ஊக்குவித்தல்-வெண்டை விதை மற்றும் இடுபொருட்களையும்,

02 பயனாளிகளுக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024-25ன் கீழ் ரூ.16,799/- மதிப்பீட்டிலான பரப்பு விரிவாக்கம் உதிரிமலர்-செண்டுமல்லி –விதை மற்றும் இடுபொருட்களையும், பரப்பு விரிவாக்கம்- கொய்யா இடுபொருட்களையும்,

02 பயனாளிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் ரூ.21,750/- மதிப்பீட்டிலான காய்கறி சாகுபடியினை ஊக்குவித்தல் வெண்டை- இடுபொருட்களையும், பரப்பு விரிவாக்கம் மா- இடுபொருட்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 04 பயனாளிகளுக்கு ரூ.16,600/- மதிப்பீட்டிலான தெளிப்பான்களையும்,

02 பயனாளிகளுக்கு NEMO-OILSEED திட்டத்தின் கீழ் ரூ.388/- மதிப்பீட்டிலான எள் விதைகளையும், 03 பயனாளிகளுக்கு விதைகிராம திட்டத்தின் கீழ் ரூ.306/- மதிப்பீட்டிலான உளுந்து, ராகி ஆகிய விதைகளையும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ஆடாதோடா, நொச்சி ஆகிய இடுபொருட்களையும்,

வேளாண் இயந்திரமாக்குதல் துணை இயக்கத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.2,72,750/- மதிப்பீட்டிலான ரோட்டவேட்டர்களையும், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.3,000/- மதிப்பீட்டிலான ராக விதைகளையும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.690/- மதிப்பீட்டிலான ஜிங்க் சல்பேட் உரங்களையும்,

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.11,980/-மதிப்பீட்டிலான மண்புழு உரப்படுகைகளையும் என ஆக மொத்தம் 37 விவசாயிகளுக்கு ரூ.12,19,663/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) செல்வி, வேளாண்மை துறை துணை இயக்குநர் சண்முக ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முதன்மை அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top