Close
டிசம்பர் 18, 2024 7:15 மணி

இரண்டு ஆண்டுக்குப் பிறகு நிரம்பி வழியும் தூசூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான, தூசூர் ஏரி நிரம்பி, உபரிநீர் கடகால் வழியாக வெளியேறி வருகிறது.

தொடர்மழையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
நாமக்கல்-துறையூர் மெயின் ரோட்டில், சுமார் 8 கி.மீ. தொலைவில் தூசூர் கிராமத்தின் அருகில், மிகப் பழமையான தூசூர் ஏரி அமைந்துள்ளது. சுமார் 600 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரி, நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாகவும், எருமப்பட்டி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

தூசூர் ஏரியின் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் நெல், கரும்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்கள் பயிரிடுவதற்கு இந்த ஏரி நீர் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மழை பெய்தால், மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து, கரைபோட்டான் ஆற்றில் நீர் வரத்து அதிகாரிக்கும். இந்த தண்ணீர் நஞ்சுண்டாபுரம் ஏரி, காந்திபுரம் ஏரி, முத்துகாப்பட்டி ஏரி, பழையபளையம் சின்ன ஏரி, பழையபாளையம் பெரிய ஏரி ஆகிய ஏரிகள் உட்பட 9 ஏரிகளில் நிரம்பும்.

பின்னர் உபரிநீர் தூசூர் ஏரியை வந்தடையும், தூசூர் ஏரி நிரம்பிய பின்னர் வெள்ளநீர் வளையப்பட்டி வழியாக அரூர், ஆண்டாபுரம் ஏரி வழியாக சென்று கடைசியில், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரியில் கலக்கும் வகையில் வெள்ளநீர் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சுமார் 2 வாரங்களாக கொல்லிமலை, சேந்தமங்கம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கரைபோட்டான் ஆற்றில் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்டு நஞ்சுண்டாபுரம் முதல் பழையபாளையம் வரை உள்ள ஏரிகள் கடந்த வாரம் நிரம்பி, உபரிநீர் தூசூர் ஏரிக்கு வரத்து துவங்கியது.

இந்த நிலையில் நேற்று தூசூர் ஏரி நிரம்பியது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தூசூர் ஏரி நிரம்பி கடகால் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. மிகப் பெரிய ஏரியான தூசூர் ஏரி நிரம்பி பார்ப்பதற்கு கடல் போல் காட்சியளிப்பதால், நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் ஏரி பகுதிக்கு சென்று ஏரியை பார்த்து ரசித்து செல்கின்றனர். ஏரி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரியின் முழு கொள்ளளவு 66.87 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் ஆயக்கட்டு பரப்பு 542.82 ஏக்கர்.

இது தவிர ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதிபெறும் என்பதால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top