சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 92 பேருக்கு, ரூ. 53.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி. விழாவில் கலந்துகொண்டு, 92 பேருக்கு ரூ. 53.05 லட்சம் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:
ஐ.நா சபை, 1992ம் ஆண்டு டிசம்பர் 18ல், சிறுபான்மையினருக்கு பொருந்தும் தனிநபர் உரிமைகள் பற்றிய அறிக்கையை அங்கீகரித்து அறிவித்தது. அவற்றை நினைவு கூறும் வகையில், இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் தினம், 2013ம் ஆண்டு டிசம்பர் 18 முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகின்றார்.
நாமக்கல் மாவட்டத்தில், 49,760 முஸ்லீம், கிறிஸ்துவர், சீக்கியர், ஜெயின் மதம் சார்ந்த சிறுபான்மையினர் உள்ளனர். மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கங்கள் மூலம், ஆதரவற்ற விதவைகளுக்கு சிறுதொழில் துவங்க உதவி, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம், 392 பயனாளிகளுக்கு, ரூ. 55.53 லட்சம், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் 49 பேருக்கு ரூ. 9.60 லட்சம் சிறுதொழில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களையும், சிறுபான்மையின மக்கள் பயன்படுத்தி, தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்தி கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.