Close
டிசம்பர் 23, 2024 1:12 மணி

நாமக்கல் கணபதி நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு: பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

கோப்புப்படம்

நாமக்கல்லில் பெய்த மழை காரணமாக, கணபதி நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அதனால், ஆவேசம் அடைந்த மக்கள் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. அதன் காரணமாக, பட இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல்வேறு இடங்களில் கனமழையும், ஒரு சில பகுதியில் லேசான மழையும் பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 39வது வார்டு கணபதி நகரில், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அதனால், மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததுடன், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், அவ்வழியாக சென்ற வாகனங்களை சிறைபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நாமக்கல் கால் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான காவல்துறையினர்  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று சமரசம் செய்தனர்.

தொடர்ந்து, மழைநீர் வெளியேறுவதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மழையின் போதும், இதே நிலை தொடர்வதால், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, கொண்டிசெட்டிப்பட்டி ஏரி முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறிய நீர், ரோட்டில் தேங்கியது. அதனால், அப்பகுதியில் தடுப்பு அமைத்து, போக்குவரத்துக்கு மாற்றிவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top