Close
டிசம்பர் 23, 2024 10:48 காலை

பிப்ரவரி 2ம் தேதி பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் பொதுக்குழு கூட்டத்தில், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் பேசினார்.

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை வருகிற பிப். 2ம் தேதி சிறப்பாக நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மருதகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயில் கொங்கு வேளாளர் சமூகத்தின் பண்ணைகுலம் மற்றும் தூரன்குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரமாண்டமாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கோயிலில் கருங்கற்களால் கட்டப்படும் 5 நிலை ராஜகோபுரம், முன்புறம் பிரம்மாண்டமான கொடிக்கம்பம், அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச்சுவர் மற்றும் ஆகம விதிமுறைப்படி கர்ப்பகிரகத்தின் மேல் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம் போன்ற சிறப்பம்சங்களுடன் கும்பாபிஷேக பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
வருகின்ற 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் குடிப்பாட்டுகாரர்கள் மகாசபைக் கூட்டம், பழனி முருகன் திருக்கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவரும், மருதகாளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்று, வரும் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்தும், விழாவிற்கான பல்வேறு பணிகளை மேற்கொள்ள தனித்தனியாக குழுக்கள் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருக்கோயில் அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் குழு உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் திரளான பண்ணை குலம் மற்றும் தூரன் குலம் குடிப்பாட்டு மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top