பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர், நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட மாணிக்கநத்தம் மற்றும் மற்றும் இருக்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளில் இருந்து கழிவுநீரைக் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்ய பேரூராட்சிகள் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மாணிக்கநத்தம், இருக்கூர் மற்றும் வீரணம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகள் செழிப்பான விவசாய பகுதிகளாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கரும்பு, நெல், வாழை, மரவள்ளி கிழங்கு, தென்னை, எண்ணை வித்துக்கள் மற்றும் சிறுதானிய பயிர்கள் அதிகம் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பரமத்தி பேரூராட்சி மற்றும் வேலூர் பேரூராட்சி பகுதிகளின் கழிவுநீரைக் கொண்டு வந்து சுத்திகரிப்பு என்ற பெயரில் சில நேரங்களில் சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் திறந்து விடும் சூழ்நிலையும் உருவாகும்.
இதனால் மேற்குறிப்பிட்ட 3 பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் விளை நிலங்களின் மண் வளம் பாதிக்கப்பட்டு, பயிர் விளைச்சல் இல்லாமல் மலட்டுத்தன்மை ஏற்படும்.
மேலும், அப்பகுதியில் சுகாதார கேடும் ஏற்படும். எனவே விவசாயம் நிறைந்த இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசின் பேரூராட்சிகள் நிர்வாகம் கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.