Close
டிசம்பர் 26, 2024 8:47 காலை

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே பாலம் : எம்.பி. ராஜேஷ்குமார் தகவல்..!

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே பாலம் அமைக்க அனுமதி அளித்துள்ளதாக ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல்:

நாமக்கல் புதிய பைபாஸ் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக, மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகிற 2025ம் ஆண்டு இறுதிக்குள் முதலைபட்டி முதல் திருச்சிரோடு வரை 3 கட்ட பைபாஸ் பணிகள் நிறைவு பெறும் என ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் கூறினார்.

இது குறித்து ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாமக்கல் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சேலம் ரோட்டில் உள்ள முதலைப்பட்டியில் இருந்து, சேந்தமங்கலம் ரோடு, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, மோகனூர் ரோடு வழியாக வள்ளிபுரம் அருகே சேலம்&கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ரிங் ரோடு எனும், புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணிக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த பணிகள், 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சேலம் ரோட்டில் முதலைப்பட்டியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை முதல் கட்டப்பணிகள் முடிவடைந்து, புதிய பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தற்போது புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேந்தமங்கம் ரோட்டில் உள்ள வேட்டாம்பாடி வரை 2ம் கட்ட பணியும், சேந்தமங்கலம் ரோட்டில் இ:ருந்த திருச்சி ;ரோட்டில் புதுப்பட்டி வரை 3ம் கட்டப்பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

2ம் கட்டத்தில் மரூர்ப்பட்டி அருகில் ரயில் பாதை அமைந்துள்ளது. அந்த இடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய ரயில்வே வாரியத் தலைவரை டில்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.

தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கான தொழில்நுட்ப அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 1 கி.மீ தூரம் உள்ள ரயில்வே மேம்பாலப்பணிகள் ரூ. 70 கோடி மதிப்பீட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் விரைவில் மேற்கொள்ளப்படும். இந்த பணியும், 2, 3ம் கட்ட பைபாஸ் ரோடு பணியும் ,அடுத்த 2025ம் ஆண்டிற்கு முடிவடைந்துவிடும். அதைத்தொடர்ந்து சேலத்தில் இருந்து திருச்சி, துறையூர் செல்லும் வாகனங்கள் நாமக்கல் நகருக்குள் செல்லாமல் புதிய பைபாஸ் ரோடு வழியாக செல்ல முடியும்.

முட்டை ஏற்றுமதி:

நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார். ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், நாமக்கல்லில் இருந்து கப்பல்மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 5 கோடி முட்டைகள் அங்கு இறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து தமிழக முதலமைச்சர் அறுவுறுத்தலின் பேரில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அனுகி கோரிக்கை விடுத்தேன்.

அவரது ஏற்பாட்டின்பேரில் ஒமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அந்நாட்டின் அதிகாரிகளுடன் பேசி, தற்போது முட்டை ஏற்றுமதி சீரடைந்துள்ளது. இதேபோல் கத்தார் நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து வருகிற 28ம் தேதி முட்டை ஏற்றுமதியாளர்கள் மூலம் டில்லியில் உள்ள கத்தார் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தெப்பத்தேரோட்டம்:

நாமக்கல் மெயின்ரோட்டில் உள்ள புராண சிறப்பு பெற்ற கமலாலயக்குளத்தில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக தெப்பத்தேர் திருவிழா நடைபெற்றதாகவும், தற்போது மீண்டும் தெப்பத்தேரோட்டம் நடத்த வேண்டும் என்றும் பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அனுமதி வேண்டி தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் தெப்பத்தேரோடம் நடத்தப்படும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top