திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க இலவச டோக்கன் வரும் 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமலா ராவ் திருமலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10ம்தேதி வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று முதல் 19ம்தேதி வரை சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. இதற்காக பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்படும். ஏற்கனவே டிசம்பர் 24ம்தேதியன்று ஆன்லைனில் 1.40 லட்சம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்து கொண்டனர்.
ஆன்லைனில் தரிசனம் முன்பதிவு செய்த நன்கொடையாளர்கள் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த 10 நாட்கள் விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் முக்கிய’ வி.ஐ.பிக்கள் நேரில் வந்தால் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனவரி 7ம்தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஜனவரி 11 வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி இடையே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும் என்று கூறினார்
திருப்பதியில் 87 கவுன்டர்கள் மற்றும் திருமலையில் 4 கவுன்டர்கள் என மொத்தம் 91 கவுன்டர்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.
ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்றுநாட்களுக்கு 1.20 லட்சம் டோக்கன்கள் ஜனவரி 9ம்தேதி அதிகாலை 5 மணி முதல் வழங்கப்படும். மேலும் வழக்கமாக டோக்கன்கள் வழங்கப்படும் பூதேவி வளாகம், சீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் காம்பளக்ஸ் ஆகிய இடங்களில் 19ம்தேதி வரை தினமும் டோக்கன்கள் வழங்கப்படும்.
நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க சர்வ தரிசன டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வர வேண்டும். இலவச தரிசன டோக்கன் பெற ஆதார் கார்டு முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.