தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி, உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சங்கத்திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் அருள் தலைமை வகித்தார். ட்ரெய்லர் உரிமயைõளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், ஆட்டோ நகர் சங்க செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி அனைவரும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை கடந்த 8 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம், தினசரி நாமக்கல்லைச் சேர்ந்த சுமார் 500 லாரிகள் மற்றும் ட்ரெய்லர்கள் காப்பர் பிளேட் லோடு ஏற்றிச்சென்று வந்தது.
ஆலை மூடப்பட்டுள்ளதால், சுமார் 5000க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி ஆலையை மூடி உள்ளனர். அப்படி இருந்தால் சுகாதார கேடு ஏற்படாத வகையில், நவீன இயந்திரங்களைப் பொருத்தி, ஆலையை கண்காணிக்கும் வகையில் அரசு மூலம் நிபுணர்கள் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து, அதன் மேற்பார்வையில் ஆலையை இயக்க வேண்டும்.
ஆலை இயங்காததால், நாமக்கல்லைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது, எனவே தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும். இல்லாவிட்டால் லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறினார்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த், துணைத்தலைவர் பாலச்சந்திரன், குமரவேல், இணை செயலாளர் சந்திரசேகரன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, எல்பிஜி டேங்கர் உரியைõளர்கள் சங்க உபதலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் பிரபாகரன், பொருளாளர் அம்மையப்பன் உள்ளிட்ட திரளான லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 250 லாரிகள் சங்க வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அதன் டிரைவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.