விடுமுறை நாளில் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்செங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட வையப்பமலை-மல்லசமுத்திரம் பிரிவு ரோட்டில் உள்ள சந்தை திடலில் அரசு ரேஷன் கடை அமைந்துள்ளது.
இந்தக் கடையில் இருந்து விடுமுறை தினமான நேற்று காலை சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனர். அதுபோல் கடையின் பின்புறம் உள்ள நபரின் வீட்டில் இருந்தும் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டன.
இதைக்கண்டு சந்தேகமடைந்த மாதர் சங்க தலைவர் பழனியம்மாள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சரக்கு வாகனத்தை பிடித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் இருந்தவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து எலச்சிபாளையம் போலீசாரிடம் ரேசன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது