Close
ஜனவரி 22, 2025 7:04 காலை

நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறை நிரப்பும் போராட்டம்: 294 மாற்றுத்திறனாளிகள் கைது..!

நாமக்கல் ஆர்டிஓ ஆபீஸ் முன்பு, மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

நாமக்கல் :

நாமக்கல், திருச்செங்கோட்டில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஈடுபட்ட மொத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, நாடு முழுவதும் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா போல் ரூ. 6,000, 10,000, 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 50 சதவீதம், 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையை தொடர வேண்டும்.

8 மணி நேரம் பணிதளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெறவேண்டும். அனைவருக்கும், 100 நாள் வேலை முழுமையாக வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். கிராம பஞ்சாயத்துக்களை, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆண்கள், பெண்கள் என 160 பேரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில், அவர்களை விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மூத்த தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என, மொத்தம் 134 பேர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டனர். நாமக்கல், திருச்செங்கோட்டில் நடந்த மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில்,ö மாத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top