Close
ஜனவரி 31, 2025 5:51 காலை

‘உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்’ ஆட்சியர் ஆய்வு..!

நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2வது நாளாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ,மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் தேவைகளை தீர்க்கும் வகையில் அரசின் அனைத்து சேவைகளும் மக்களுக்கு நேரடியாக சென்று சேர்க்கும் வகையில் அரசின் சார்பில்  செயல்பட்டு வருகிறது.

மேலும் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாதத்திற்கு ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பவித்திரம் மற்றும் தி. வாளா வெட்டி, வெறையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டு அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து  வெள்ளிக்கிழமை 2வது நாளாக  திருவண்ணாமலை தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

திருவண்ணாமலை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உணவு தரமாகவும் சுவையாகவும் உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சியில் செயல்படும் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் வேளாண் பொருட்கள் தரமாகவும் முறையான விலைகளில் விற்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தையில் தேவையான வசதிகள் குறித்து விவசாய விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். மேலும் உழவர் சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

இந்த ஆய்வின்போது, டிஆர்ஓ ராமபிரதீபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சரண்யா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வடிவேலன், மாநகராட்சி ஆணையாளர் காந்தி ராஜ், தாசில்தார் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரித்திவிராஜ் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top