சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது
திருவேடகம் விவேகானந்தா கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தமிழ்நாடு வேளாண் சுற்றுலா கழகம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். தமிழ்நாடு அக்ரோ டூரிசம் நிர்வாகி அருள் ஜேம்ஸ், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ரிஜின் வரவேற்று பேசினர். சுற்றுச்சூழலியல் எழுத்தாளர், விவசாய விஞ்ஞானி பாமயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், உலக சர்வதேச கல்வி தினம் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பதை உலகம் முழுவதும் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி உலக கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளோடு இணைந்து மாணவர்கள் தலைமைத்துவம் பெறுவதற்கான பயிற்சிகள், குடும்ப முன்னேற்றம் சமூக முன்னேற்றம் மற்றும் பிறருக்கு கல்வியை கிடைக்கச் செய்வதற்கு எடுக்கும் முன்னேற்பாடுகளை அங்கீகரித்து விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.
நாட்டின் முதுகெலும்பாக இருப்பது வேளாண்மை தொழில். அது குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் உருவாக வேண்டும். நாம் உண்ணும் உணவு என்பது நிலமும் நீரும் சேர்ந்ததுதான் என 2500 ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்கள் எழுதிச் சென்றுள்ளனர்.
விவசாய நாடான இந்தியாவில், வேளாண்மையின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். பல்வேறு உலக நாட்டினரும் இந்தியாவின் பாரம்பரியமான வேளாண்மையை தெரிந்து கொள்ள வேளாண் சுற்றுலாவையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
நம் மாணவர்கள் மற்ற நாட்டின் வேளாண்மை தலங்களுக்கு சென்று அங்குள்ள மண், பயிர், செடி, பூச்சிகள் பறவைகள் குறித்தும் ஆய்வு செய்து தெரிந்து கொண்டு இந்தியாவில் விவசாயத்தை இன்னும் வளர்க்க வேண்டும். கல்வியோடு விவசாயத்தையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினர்.