திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, திருவண்ணாமலையில் இஸ்லாமியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, திருவண்ணாமலை சந்தாமியான் மஸ்ஜித் தலைவரும், முத்தவல்லியுமான ஏ.ஆா்.நாசா் உசேன் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை சாந்தாமியான் மஸ்ஜித்துக்கு சொந்தமான சிலபந்தல், இனாம் வேலகந்தல், கிராமங்களில் சுமார் 58 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. பொய்யான ஆவணங்களை கொண்டு தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டிருப்பதாகவும்
இது சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது . இதை அடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 நாட்களில் இடத்தை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கால அவகாசம் முடிந்தும் மேல் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாய் தலையணையுடன் அவர்கள் வந்திருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முடிவு தெரியும் வரை இங்கேயே தங்கி இருக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில், சந்தாமியான் மஸ்ஜித்துக்குச் சொந்தமான 58.80 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவா்களை உடனே வெளியேற்ற வேண்டும்.
நிலத்தை மீட்டு வக்ஃபு வாரிய நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளா்கள் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உறுதி
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்த ஆட்சியர் ,ஆட்சியர் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக போராட்டம் நடத்திய நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை இஸ்லாமியர்கள் வாபஸ் பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.