Close
பிப்ரவரி 2, 2025 12:52 மணி

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: அமைச்சர்கள் பங்கேற்பு

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 3 அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு மருதகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் கொங்கு வோளர் சமூகத்தின் பண்ணைகுலம் மற்றும் தூரன்குலத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரமாண்டமாக திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. கோயிலில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள 5 நிலை கொண்ட ராஜகோபுரம், தங்க முலாம் பூசப்பட்ட 3 நிலை மூலவர் கோபுரம், முன்புறம் பிரம்மாண்டமான கொடிக்கம்பம், அழகியல கலை வேலைப்பாடுகளுடன் கூடிய சுற்றுச்சுவர் போன்ற சிறப்பம்சங்களுடன் கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்துள்ளது.
இதையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த ஜன. 27ம் தேதி துவங்கியது. இன்று 2ம் தேதி அதிகாலை 6ம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.

பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முதலில் மூலவர் தங்க கோபுரத்திற்கும், பின்னர் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கும் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.

கோயில் கோபுரங்களுக்கு ட்ரோன்கள் மூலம் மலர் தூவப்பட்டது. தெடர்ந்து மருதகாளியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி.ராஜேஷ்குமார், கலெக்டர் உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ட்ரோன்கள் மூலம் மலர்கள் மற்றும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் குழு உறுப்பினர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பண்ணை குலம், தூரன் குலம் குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top