Close
பிப்ரவரி 23, 2025 4:28 காலை

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம் தொடக்கம்

நக்சா திட்டத்தை தொடங்கி வைத்துப் பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற திட்டத்தின் தொடக்க விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நக்சா திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது;

நக்சா திட்டத்தின் கீழ் ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தி நில அளவை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் புவி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை உள்ளாட்சி அமைப்புகளால் நிா்வகிக்கப்படும் சொத்து வரிக்கான தரவுகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் திட்டம் திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் கூறினாா்.

இத்திட்டமானது மாநகரத்தில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொண்டு ஒளிப்படம் உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்வொளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலங்களில் வருவாய் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நிலஅளவை மேற்கொள்ளப்படும்.

நவீன நிலஅளவை கருவிகளைக் கொண்டு (DGPS மற்றும் ETS) நிலஅளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும். நிலஅளவை மேற்கொண்டு தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல் முறையீடு செய்துகொள்ளலாம், அவை விதிகளிப்படி பரிசீலித்து தீர்வு  காணப்படும்.

இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்ப்புற நிலஆவணங்கள்  வெளியிடப்படும். மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைத்த பின்னர் புளி அமைவிடப் புள்ளிகளுடன் கூடிய வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் “நக்சா ” திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட நில உடமைதார்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்று ம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளா் காந்திராஜன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், நில அளவைத்துறை உதவி இயக்குநா் சண்முகம் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top