ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை பேரழில் நிறைந்த ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான கோடை விழாவை அடுத்த மாதம் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் 2 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது
இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கூறியதாவது: பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ ஆதியோர் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றின் மூலம் பழங்குடியின மக்களை பயன் பெற செய்ய வேண்டும் என்று கூறினார்
மேலும், கோடை விழாவில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகள், புகைப்பட கண்காட்சிகள் நடத்துவது, சிறப்பு பஸ்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அதிக எண்ணிக்கையில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.