புதுக்கோட்டையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை சீல் வைத்த புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புதுக்கோட்டை நகர பகுதிகளில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை மற்றும் வரி பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒருவார காலமாக நகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பல லட்சம் வரி மற்றும் வாடகை பாக்கியை வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பல லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி நகராட்சி அதிகாரிகள் பிஎஸ்என்எல் ஊழியர்களை வெளியே அனுப்பி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் புதன்கிழமை புதுக்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு உரிய முறையில் முன்னறிவிப்பு வழங்காமல் பிஎஸ்என்எல் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்ததால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.