Close
நவம்பர் 25, 2024 10:37 மணி

இந்தியாவில் கொரோனா 4 -ஆவது அலைக்கான சாத்தியக் கூறுகள் இல்லை

இந்தியா

கொரோனா நான்காம் அலை வர வாய்ப்பில்லை

இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கான சாத்தியக்கூறு கள் இல்லை என கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார்.
டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் 4 -ஆம் அலைக்கான சாத்தியக்கூறுகள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் 4 -ஆவது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலக நாடுகள் பரவியது. பின்னர் காமா, பீட்டா, ஒமிக்ரான் என உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தியது. படிப்படியாக தொற்று பரவல் விகிதம் குறைந்ததையடுத்து இந்தியாவில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் சீனா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உணரப்பட்ட டெல்லி, மராட்டியத்தில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், டெல்லியில் கடந்த 15 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 15 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 500% அளவிற்கு உயர்ந்து இருப்பது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருப்பதாக ஆய்வை நடத்திய நிறுவனம் கூறியுள்ளது.

இந்த எண்ணிக்கையை கணக்கிடும் போது, ஏற்கெனவே கணித்தது போல இந்தியாவில் 4வது அலைக்கான சாத்தியக்கூறுகள் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கபடவேண்டும் என அறிவுறுத்திய அவர்கள், தவறினால் விளைவுகள் மோசமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் 4 -ஆவது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். தற்போது தான் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. பெரும் பாலானவர்கள் முககவசம் அணிவதில்லை. மக்கள் சற்று கவனக்குறைவாக இருப்பதால், கொரோனா தற்போது அதிகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.

கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் 4-வது அலை வருமோ என்று அச்சப்பட தேவை இல்லை. தற்போதைய நிலவரப்படி 4 -ஆவது அலைக்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான்.

நாடுமுழுவதும் மக்களிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. 90 சதவீத பேரிடம் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. எனவே கொரோனா எத்தகைய வடிவத்துடன் உருமாற்றம் பெற்று வந்தாலும் அதிகளவு பரவ வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top