44 -ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், சதுரங்க ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, (15.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்க விடுதியைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஓட்டமானது, மாவட்ட ஆட்சியரக ரவுண்டானா, நகராட்சி அலுவலகம், அண்ணாசிலை, பழைய பேருந்துநிலையம், புதிய பேருந்துநிலையம் வழியாக விளையாட்டரங்கத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தின் பொழுது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதிலும் 44வது செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களி டையே ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ள ஒட்டு வில்லைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடிய சதுரங்க போட்டிகளையும்பார்வையிட்டார். மேலும் தன் புகைப்படம் (செல்பி) எடுப்பதற்கான அமைப்பில் மாவட்ட ஆட்சியர் தன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.