Close
நவம்பர் 22, 2024 5:41 காலை

அறுவடைக்குப்பின் பயறுவகை சாகுபடி திட்டம்: திருமயம் பகுதி விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை

திருமயம் அருகே ராராபுரம் கிராமத்தில் வேளாண்துறை சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராராபுரம் வருவாய் கிராமத்தில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்கள் சாகுபடி குறித்த  பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருமயம் வேளாண் உதவி இயக்குநர் ந.உமா பயிற்சியை தொடக்கி வைத்து பேசியதாவது: நெல் அறுவடைக்கு பின் வயலில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வதால் பயறு வகைப் பயிர்களில் வேர்முடிச்சுகள் மூலமாக ஆகாயத்தில் உள்ள தழைச்சத்து கிரகிக்கப்பட்டு நிலத்தில் சேர்க்கப்படுவதால் நிலவளம் மேம்படுகிறது.

பயறு வகைப் பயிர்களின் இலைகள் நிலத்தில் உதிர்வதால் மண்ணில் அங்ககப் பொருள் அதிகரிக்கிறது. குறைந்த நாளில், குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கிறது. இப்பயிர் கால்நடைகளுக்குப் புரதம் நிறைந்த தீவனமாகவும் வயலுக்குப் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது என்றார் அவர்.

புதுக்கோட்டை வேளாண் அலுவலர் (தரக்கட்டுபாடு) முகமது ரபீக் பேசுகையில், பயறு உற்பத்தியை பெருக்கு வதற்கு பருவத்துக்கேற்ற உயர் விளைச்சல் தரும் ரகங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.

ரைசோபிய நுண்ணுயிர்க் கலவையைக் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பது பயிருக்கும் மண்ணுக்கும் நல்லது மட்டுமின்றி விளைச்சலையும் 30 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்யும் . பரிந்துரைக்கப்பட்ட பயிர் எண்ணிக்கை குறையாமல் விவசாயிகள் பராமரிக்க வேண்டும்.

செடிகளுக்கிடையே இடம், சூரிய ஒளி, நீர், உரம் ஆகியவற்றுக் காக நெருக்கடி இல்லாமல் நன்றாக வளர்ந்துால் கூடுதல் மகசூல் கிடைக்கும். உரிய காலத்தில் களை நிர்வாகம், முறையான நீர் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

விதைத்தவுடனும் மூன்றாம் நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். தேவைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒரு முறையும், பூக்கும் பருவத்திலும் காய்ப் பிடிக்கும் பருவத்திலும் நீர்பாய்ச்சுவது அவசியம் . அப்பொழுது செடிகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டார்.

திருமயம் வேளாண் அலுவலர் பிரவீனா பேசுகையில்,, பூக்கள் உதிர்வதைத் தடுக்க ‘பிளோனோபிக்ஸ்’ வளர்ச்சி ஊக்கியைப் பூக்கள் தெரிய ஆரம்பித்தவுடன் ஒரு முறையும் 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும். பயறு வகைச் சாகுபடியில் டி.ஏ.பி. தெளிப்பதன் மூலம் பூ உதிர்வது பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

விதைத்த 30 மற்றும் 45-வது நாளில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு நாள் ஊற வைத்துக் காலையில் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படுமாறு, மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

ஏற்பாடுகளை, அட்மா திட்ட அலுவலர்கள் கு.நாகராஜன் க.தேவி, ரா.ராஜீ மற்றும் வேளாண் அலுவலர் ஜீவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top