புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ( 30.04.2022) சனிக்கிழமை 28 -ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல் தொடர்பாக, மாவட்ட அளவிலான அனைத்துத் துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் (26.04.2022) நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க கோவிட் – 19 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வருகின்ற (30.04.2022) சனிக்கிழமை மாபெரும் கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொதுமக்களை அதிக அளவில் கலந்துகொள்ளச் செய்து, தடுப்பூசி செலுத்தும் வகையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பேரூராட்சித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்களப்பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிக அளவில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், பொதுமக்களை அதிக அளவில் கலந்துகொள்ளச் செய்திட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார அளவிலான அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவிட் -19 தடுப்பூசி முகாம்கள் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்டோ விளம்பரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர் களும், தடுப்பூசி முகாமில் தவறாது கலந்துகொள்ளச் செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, துணை இயக்குநர்கள் (பொது சுகாதாரம்) மரு.அர்ஜுன்குமார், மரு.கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.