Close
நவம்பர் 21, 2024 6:19 மணி

கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீது புகார்

ஈரோடு

மோசடி புகார்

கடனுதவி வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மகளிர் குழு தலைவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சுய உதவிக்குழு பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் வங்கியில் இருந்து கடனுதவி பெற்று அதனை மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தராமல் மோசடி செய்த மகளிர் குழு தலைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தை மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா.அதே பகுதியைச் சேர்ந்த சுமையா என்பவர் தனியார் வங்கியான IDFC மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடன் உதவி பெற்றுத் தருவதாக கூறி ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலும் சுய உதவிக் குழு பெண்களின் பெயரால் வங்கியில் இருந்து கடன் பெற்றிருந்தார். அந்த வகையில் தனியார் வங்கியில் இருந்து 40 லட்சம் வரையிலும் மகளிர் குழுவின் தலைவியான சுமையா லோன் வாங்கி இருந்தார்.

இவ்வாறு பெற்ற தொகையினை ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் ரூ. 10,000 முதல் 30,000 மட்டும் கொடுத்துவிட்டு மற்ற தொகையை கையாடல் செய்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்த வங்கியினர் தொகையைக் திருப்பிக் கட்டச் சொல்லி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட பி.பெ. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்மணி ஈரோடு மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்தார்.

அந்தப் புகாரில், ரூபாய் 30 ஆயிரம் மட்டுமே வங்கியில் இருந்து கடனாக பெற்றிருந்த நிலையில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறி வங்கி நிர்வாகத்தினர் தொகையை கட்டுமாறு கூறுகிறார்கள். எங்களுக்கு சுமையா 30,000 மட்டுமே தொகை கொடுத்து இருந்தார்.

எனவே ஒவ்வொரு சுய உதவிக் குழு உறுப்பினரின் பெயரால் தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூபாய் 40 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சுமையாகடந்த 10 நாட்களுக்கு மேலாக தலைமறை வாகிவிட்டார்.

இந்த மனுவை விசாரணை செய்த கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜ் பிரபு, சுமையாவை தேடி வந்தார். இந்நிலையில் சுமையாவை பிடித்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஈரோடு
சாலைமறியலில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மகளிர்

இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி சுய உதவி குழு உறுப்பினர்கள் அனைவரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் பெயரால் வாங்கிய கடன் தொகையை வங்கியில் திரும்ப செலுத்தவும், மோசடியில் ஈடுபட்ட சுமையாக கைது செய்ய வலியுறுத்தியும், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தைசுய உதவி குழு பெண்கள் முற்றுகையிட்டார்.

பின்னர் அந்தப் பெண்கள் பவானி சாலையில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் கருங்கல் பாளையம் ஆய்வாளர் ராஜ் பிரபு பேச்சுவார்த்தை நடத்தினார்.

நாளை வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தைப் பெற்று தருவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராஜ் பிரபு கூறுகையில், சுமையாளுக்கு கடனுதவி வழங்கிய வங்கியின் முழு விபரங்களையும் எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top