Close
ஏப்ரல் 23, 2024 1:58 மணி

தான்சானியா நாட்டில் வேளாண் பயிற்சி அளித்த பயண அனுபவம்… எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்

தான்சானியா

தான்சானியாவில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த தமிழக விஞ்ஞானிகள்

சிறு வயதில் பலருடை வெளிநாட்டு பயண அனுபவக் கட்டுரைகளைப் படித்து ரசித்ததுண்டு. பல நேரங்களில் அதுபோன்ற பயணக் குறிப்பைப் படிக்கும்போது இதுபோன்ற அனுபவங்கள் நமக்கும் வருவது எப்போது என்று நினைத்த துண்டு. ஒரு சில பயணங்கள் தந்த அனுபவங்களைப் பகிரலாமென்ற எண்ண உந்துதலே இந்தக் கட்டுரை.

தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் விவசாய அலுவலர்களுக்கு செம்மை நெல் சாகுபடி மற்றும் கிராம அறிவு மையம் பற்றிய பயிற்சி தான்சானியா நாட்டில் நடைபெற்றது.

நார்வே நாட்டு உதவியுடன் தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவனம் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற மேம்பட்ட இடுப்பொருட்கள் பயன்பாடு உள்ள நெல் உற்பத்தி முறை (Climate smart and Resource efficient rice production ) திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் செம்மை நெல் சாகுபடி எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மாதிரி கிராம அறிவு மையம் மற்றும் பயிர் மருத்துவ முகாம் ஆகியவைகள் பற்றிய பயிற்சி மொராக்கரோவில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் (எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்)  நானும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் பேராசிரியர் வா.இரா. சுவாமிநாதனும்  கருத்தாளர்களாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

தன்சானியா (Tanzania), கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. தான்சானியாவில் முக்கிய மொழி ஸ்வாஹிலி (Swahili) என்றும் கருதப்படுகிறது.

பெண்கள் ஆதிக்கம் நிறைந்த நாடு… தான்சானியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிகமாக காணப்படு கிறார்கள். அனைத்து விதமான வேலைகளையும் செய்கிறார்கள்.

தான்சானியாவின் மொத்த மக்கள் தொகையில் 32.17 சதவீதம் பெண்கள் (2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு) முக்கிய முடிவு எடுப்பதில் யார் அதிகம் பங்கு வகிக்கிறார்கள். என்ற கேள்விக்கு யார் அதிகம் சம்பாதிக்கிறார்களோ அவர்களே அதிக பங்கு வகிக்கிறார்கள். என்ற பதில் கிடைத்தது.

கல்வியை பொறுத்தவரையில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். வீட்டு வேலைகள் செய்வது, குழந்தைகள் பராமரிப்பது, பெரும்பாலும் பெண்கள் பொறுப்பாகவே உள்ளது.

குழந்தையை முதுகிற்கு பின்னால் தொட்டில் போல் கட்டி வைத்துக் கொள்கிறார்கள். அப்படியே வைத்துக் கொண்டு வேலைகளை செய்வதை பார்க்க முடிகின்றது. வீடுகளில் குழந்தைகளை பராமரிப்பதில் ஆண், பெண் பாகுபாடு இருப்பதாக தெரியவில்லை.

நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் உடை அணிவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவில்லை. ஆனால் தலை முடியை பராமரிப்பதில் விதவிதமாக பின்னுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு பெண்களும் பல்வேறு வடிவங்களில் தலைமுடியை பின்னி இருப்பதை நாம் பார்க்கலாம்.

உணவிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள், வளர் இளம் பெண்கள் மிகக் குறைவு. நல்ல உணவும், அதுவும் பெரும்பாலும் அசைவ உணவு (மாட்டிறைச்சி)  மற்றும் காய்கறி, பழ வகைகள் உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதில்லை. என அறிய முடிகின்றது.

கலப்பு திருமணத்திற்கு பெரிய எதிர்ப்பு இல்லை. சாதி மாறி மட்டுமல்ல மதம் மாறி கூட திருமணம் செய்து கொள்கிறார் கள். உதாரணமாக தற்பொழுது உள்ள பெண் அதிபர் சமியா சுலுகு ஹஸன், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவருடைய கணவர் ஹஃபித் அமீரின் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இங்கு ஆண்கள் தான் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும்.

மலை வாழ் மக்கள் (Tribs) தான்சானியாவில் சுமார் 142 மலைவாழ் பிரிவினர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு மலைவாழ் பிரிவினரும் வேறு வேறு மொழி பேசுகிறார்கள். வெவ்வேறு கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்.

உதாரணமாக மாசாயி என்று ஒரு மலைவாழ் மக்கள் உள்ளார்கள்.  இவர்கள் தான்சானியாவில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் குறிப்பாக அருஷா (Arusha) மண்யாரா (Manyara) மற்றும் மாரா (Mara) பிராந்தியங்களில் அதிகம் உள்ளார்கள். இவர்களுடைய கலாசாரம் முற்றிலும் வேறுபட்டது.

இவர்களுடைய முக்கிய வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பு ஆகும். கால்நடைகளுடன் இவர்களுடைய பந்தம் மிகவும் ஆழமானது. பார்ப்பதற்கு சற்று பயமாக இருக்கும். (ஆனால் மிகவும் நல்லவர்கள் என்று சொல்கிறார்கள்.) பசுக்கள் அனைத்தும் அவர்களுக்கு சொந்தம் என்று கருதுவார்களாம்.

திருமணத்தின் போது வரதட்சணையாக பசுமாடுகளை கொடுக்கிறார்களாம். பிறபகுதிகளுக்கு சென்று பசுமாடு வளர்ப்பவர்களுடன் சண்டை போட்டு மாடுகளை ஒட்டி வந்துவிடுவார்களாம். இப்பிரிவின் இளைஞர்களின் முக்கியமான பணியாக இது கருதப்படுகின்றது.

இவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றால் கூட்டம் கூட்டமாக மாடுகளை மேய்ப்பதை பார்க்க முடியும். இவர்களுடைய உடை வித்தியாசமானதாக இருக்கும். இவர்களைப் பார்த்து சிங்கம் பயப்படுமாம். இவர்கள் வாடை பட்டாலே சிங்கம் ஓடிவிடுமாம்.  தான்சானியாவின் பல்வேறு ஓவியங்களில் மாசாயி ஈட்டியால் சிங்கத்தை குத்துவது போன்ற படங்களில் பல பகுதிகளில் பார்க்க முடியும். ஒரு வயதிற்கு பின்பு அனைவரும் மொட்டை அடித்துக் கொள்வார்களாம்.

கல்விக்கு முக்கியத்துவம்..
தான்சானியாவில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அனைவரும் பள்ளி கல்வி வரை படிக்க வேண்டும். என்பது சட்டமாகவே உள்ளது. பெண்கள் தான்சானியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் அதிகமாக காணப்படுகிறார்கள்.அனைத்து விதமான வேலைகளையும் செய்கிறார்கள்.

தான்சானியாவில் முக்கிய மொழி ஸ்வாஹிலி, (Swahili), இரண்டாவது மொழி ஆங்கிலம். ஆரம்பக் கல்வியில் ஸ்வாஹிலி  மொழிதான் முக்கிய மொழியாக உள்ளது. ஆங்கிலம் ஒரு பாடம் இருக்கும். உயர்கல்வியில் ஆங்கிலம் அதிகமாக உள்ளது. ஸ்வாஹிலி குறைவாக உள்ளது.

இந்தியாவை போல் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் உள்ளன. ஆனால் அரசு பள்ளிகள் அதிகம் மாணவர்கள் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தை சிறப்பாக பராமரிக்கி றார்கள். பள்ளிகளில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

நாங்கள் தான்சானியாவில் இருந்து மொரக்காரோவிர்க்கு சாலை வழியாக சென்ற பொழுது மாலையில் பள்ளிக்கூடம் விட்டு வரும் பொழுது மாணவர்கள் துடைப்பத்துடன் வீட்டிற்கு செல்வதை பல பகுதிகளில் பார்க்க முடிந்தது.

ஏன் மாணவர்கள் துடைப்பத்துடன் செல்கிறார்கள் என்று கூட வந்தவர்களிடம் கேட்ட பொழுது பள்ளி வளாகத்தையும் வகுப்பறைகளையும் சுத்தம் செய்வது மாணவர்களின் பொறுப்பு. அதுவும் தினமும் வீட்டில் இருந்து துடைப்பத்தை எடுத்துச் சென்று சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். என்று சொன்னார்கள்.

இது எங்களுக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது. ஏதாவது ஒரு பள்ளியில் போய் இது பற்றி இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் அதிகரித்தது.

தமிழ்நாடு
தான்சானியா நாட்டில் மொராக்கோ அருகிலுள்ள பள்ளியை பார்வையிட்ட போது

மறுநாள் காலையிலயே அதாவது பள்ளி துவங்கும் நேரத்திற்கு முன்னதாகவே மொரக்காரோவில் நாங்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்த ஆரம்பப் பள்ளிக்கு (இங்கு ஆரம்ப பள்ளி என்பது ஏழாம் வகுப்பு வரை) சென்றோம். மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இது பற்றி தலைமை ஆசிரியரிடம்  விசாரித்த பொழுது மாணவர்கள் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணுவதில் ஆர்வமாக இருப்பார்கள். இப்பழக்கம் பள்ளியில் மட்டுமல்ல வீட்டிலிருந்தே தொடங்குகின்றது. சிறுவயதிலிருந் தே இது போதிக்கப்படுகின்றது என்றார்.

எங்களைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அன்பாக உபசரித்தார் கள். சில வகுப்புகளுக்கும் ஆர்வமாய் அழைத்துப் போய் காண்பித்தார்கள். இது ஒரு மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. மாணவர்களும் உற்சாகமடைந்தார்கள். மீண்டும் 2024 ஜனவரியில் இங்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top