கந்தர்வகோட்டை எழுத்தாளர் அண்டனூர் சுரா -வுக்கு எழுத்து அறக்கட்டளை சார்பில் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் அண்டனூர் சுராவின் இயற்பெயர் சு.இராஜமாணிக்கம் (29.05.1983), அண்டனூர், கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம். கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
மழைக்குப் பிறகான பொழுது, திற, ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, பிராண நிறக் கனவு, எண் வலிச் சாலை, எத்திசைச் செலினும், தடுக்கை என ஏழு சிறுகதைத் தொகுப்புகள். முத்தன் பள்ளம், அப்பல்லோ, தீவாந்தரம் என மூன்று நாவல்கள். கொங்கை, முதல் வகுப்பு பொதுத் தேர்வு, நீளநடுக்கோடு என மூன்று குறுநாவல்கள். முட்டாள்களின் கீழ் உலகம், அழிபசி தீர்த்தல், சொல்லேர் என மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
கொங்கை உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் முத்தன் பள்ளம் கணையாழி இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசும் நீளநடுக்கோடு ஸீரோ டிகிரி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் பெற்றன.
இவர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது, என்சிபிஎச் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, இலண்டன் புதினம் விருது, இலங்கை கி.பி. அரவிந்தன் விருது, சௌமா விருது, நெருஞ்சி இலக்கிய விருது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.