ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழக மக்களை மயக்கி தமிழகத்தில் பாஜக டெபாசிட் ஆவது பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் அடிக்கடி தமிழகத்துக்கு மோடி வந்து செல்கிறார். மோடியிடம் அவரது குடும்பம் பற்றி கேட்டால் நாட்டு மக்கள் தான் என் குடும்பம் என்கிறார். இந்த நேரத்தில் மோடிக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக., டெபாசிட் பெற்று காட்டினால், மோடியை இந்த நாட்டின் பிரதமராக நான் ஏற்றுக் கொள்கிறேன்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ சட்டம் தூக்கி எறியப்படும். இதுவரை காங்கிரஸ் சார்பில் 2 வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் 3 நாட்களில் வெளியாகும்.
பிச்சை எடுப்பதில் குஷ்பு நிறைய ஆர்வமாக இருக்கிறார் போலும். அதனால் தான் 1000 ரூபாய் பெறும் பெண்களை பிச்சைக்காரி என்று விமர்சனம் செய்துள்ளார். மிக விரைவில் குஷ்புவுக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்.
பிரதமர் மோடியின் உருவமே பொய், பித்தலாட்டம் நிறைந்ததுதான். அவரும், அவரைச் சார்ந்தவர்களும் கூறுவதையெல்லாம் ஏற்றுக் கொள்வதற்கில்லை. அவர் மட்டுமின்றி, அவரைச் சார்ந்தவர்களும் எவ்வளவு பெரிய புளுகு முட்டையை அவிழ்த்து விடுகிறார்கள் என்பதை அவர்கள் கூறும் பொய்யில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
உக்ரைன் மீது குண்டுவீச ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், மோடி ரஷ்ய அதிபரிடம் கூறியதால் குண்டுவீசும் திட்டத்தையே ரஷ்யா கைவிட்டதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள்… இதை யாராவது நம்புவார்களா,மத்திய அரசின் திட்டங்களுக்கு, ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தான் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது. இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழக மக்களுக்கு ஸ்டாலின் எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார். ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்க ளையே பல மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. எனவே, ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை என்றார்.
செய்தி- மு. நாராயணசுவாமி.