Close
நவம்பர் 21, 2024 11:30 மணி

திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார்

ஈரோட்டில் அதிமுக மாநகர் மாவட்ட. தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும்.
தற்போதைய ஆளும் திமுக அரசினால் தமிழக மக்கள் அன்றாடம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கையால் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். வழிநெடுக டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்தும், அடுத்த தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பாதிக்கும் வகையில் போதை மருந்து புழக்கம் அதிகரித்துவிட்டது.
தொடர்ந்து மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வரும் திமுக அரசை அகற்றவும் திமுக அரசுக்கு பாடம் புகட்டவும் மக்கள் தயாராகி விட்டார்கள். அந்த வகையில் நான் உள்பட தமிழகம் முழுவதும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.
அதிமுக என்னுடைய தாய் கழகமாகும். கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கிய எனது தாயார் சௌந்தரம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றார். தற்போது நான் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வெற்றியைத் தேடி தர பாடுபடுவேன்.
முன்னாள் அமைச்சர் கே வி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள் எனது வெற்றிக்காக உறுதுணையாக இருப்பார்கள்.
தமிழகம் முழுக்க இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நடத்தி வருகிறேன். ஏற்கனவே ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் பல்வேறு மக்கள் நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறேன்.
மக்கள் நல மேம்பாட்டு பணிகளைத் தவிர ஆற்றல் அறக்கட்டளை பவுண்டேஷன் சார்பில் பின் தங்கிய மக்கள் வாசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களின் சீரமைப்பு பணிகளையும் செய்து வருகிறேன்.
பல்வேறு பணிகளை செய்து வந்தாலும் அரசு பொறுப்பு இருந்தால் மக்கள் நலப் பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதால் இந்த தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி எனக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் தமிழர்கள் இழந்து வரும் உரிமைகளை மீட்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.பி. ஆக இருந்த கணேச மூர்த்தி தொகுதிக்கும் தொகுதி மக்களுக்கும் எந்தவிதமான மக்கள் பணிகளையும் செய்யவில்லை. பல கிராமங்களில் கணேசமூர்த்தி பெயரை சொன்னால் யார் அவர் என்று திருப்பி கேட்கிறார்கள்.
தொகுதியில் பல இடங்களில் அடிப்படை வசதியான வீடுகள் கட்டித் தரவும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தவும் சாலை வசதிகளை பெருக்கவும் தேவையான உதவிகளையும் பணிகளையும் செய்வேன்.
என்னை மக்கள் எளிதில் தொடர்பு கொள்ள எனது தொலைபேசி எண்ணையோ, முகநூல் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக தமிழக மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளையும் செய்யவில்லை. நான் வெற்றி பெற்று வந்தால் இந்த தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.
ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி குறித்து கட்சியின் தலைமையிடம் கலந்து பேசி அறிவிப்போம், என்றார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அண்ணன் கே.வி. ராமலிங்கம் , ஈரோடு முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு , ஈரோடு முன்னாள் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், வீரப்பன்சத்திரம் பகுதி கழகச் செயலாளர்கள் கேசவமூர்த்தி, மனோகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரத்தன் பிரதீப், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட பேரவை துணைச் செயலாளர் வீரகுமார், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, நிர்வாகிகள் சந்தானம், மாதேஸ்வரன் உள்பட பலர் இருந்தனர் .

செய்தி: நாராயணசுவாமி.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top