தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், இளைஞர்களுக்கான சோஷியல் மீடியா பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர்கள் சீனிவாசன், ஆனந்தகுமார், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கிழக்கு மாவட்ட செயலாளர், ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை வகித்துப் பேசியதாவது;
சோஷியல் மீடியாக்களில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் தாண்டி, இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டுள்ளது. தகவல் பரிமாற்றம் தான், ஒரு நாட்டில் என்ன நடக்கிறது, ஒரு மாநிலத்தில் என்ன நடக்கிறது, ஒரு ஊரில் என்ன நடக்கிறது என்பதை அதைச் சுற்றி இருக்கிற அனைத்து ஊர்களுக்கும் கொண்டு சேர்ப்பதகாகும்.
ஆரம்ப கட்டத்தில், தகவல் பரிமாற்றம் என்பது செய்தித்தாளாக, ரேடியோவாக, டிவியாக வந்தது. அதையும் தாண்டி, தற்போது, எலக்ட்ரானிக் மீடியா எனப்படும் சேட்டிலைட் டிவிக்கு மாறியது. அதையும் தாண்டி, இவற்றையெல்லாம் மிஞ்சுகின்ற வகையிலே தற்போது சோஷியல் மீடியா என்ற சமூக வலைதளம், தகவல் பரிமாற்றத்தில் முன்னிலையில் உள்ளது.
நீங்கள், நம் இயக்கத்திற்கும், அரசிற்கும் ஏற்படுகின்ற பொய் பிரச்சாரங்களை முறியடிக்க, நாம் ஒவ்வொவரும் நம்மை ஒப்படைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ஓட்டுகள் இந்த இயக்கத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு சமம்.
நீங்கள் ஒவ்வொருவரும் பயிற்சியில் பங்கு பெற்று, எதிர்காலத்தில் இந்த இயக்கத்திற்கு உங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.