தமிழக அரசின் சாதனைகளைக் கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று, கூட்டணி கட்சியினருக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் லோக்சபா தெகுதிக்கு உட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஐஎன்டிஐஏ கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட திமுக செயலார் மதுராசெந்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் லோக்சபா தொகுதியில், ஐஎன்டிஐஏ கூட்டணியின் வேட்பாளராக, கொமதேகவைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் முழுவீச்சில் பாடுபட வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளன. அதிலும் குறிப்பாக முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தேர்தல் சுற்றுப்பயனத்தின் போது, வேட்பாளர் அவர்களுடன் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். வருகிற 31ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். எனவே 31ம் தேதி அன்று அனைவரும் ஈரோட்டிற்கு செல்லவேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுசரித்து, வார்டு, நகர, ஒன்றிய வாரியாக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செல்வது சிரமம் என்பதை கருத்தில்கொண்டு, ஒரு ஒன்றியம், ஒரு நகரத்திற்கு என்று தனித்தனியாக பட்டியல் இல்லாமல், ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 இடங்கள் என்ற வீதத்தில் தேர்தல் பிரச்சார அட்டவணை தயாரித்துள்ளோம். நம் ஐஎன்டிஐஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஒட்டுமொத்த செயல்வீரர்கள் கூட்டம் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது.
வேட்பு மனு தாக்கல் அன்று முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளருடன் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு பிரச்சாரத்திற்கான நாட்கள் குறைவாக உள்ளதால், வேட்பாளர் அனைவரையும் சந்தித்து வாக்குகளை சேர்ப்பதற்கு முன்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்குகளை சேகரிப்பார். அதற்கு முன்பு முக்கிய தலைவர்களை எல்லாம் இன்று ஒரே இடத்தில் சந்திக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் தேர்தல் பிரச்சார அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும், வேட்பாளர் வர முடியாத நாட்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும், இன்று முதல் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, நோட்டீஸ்களை வழங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். தமிழகத்திலேயே, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.