Close
நவம்பர் 22, 2024 12:36 காலை

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த மக்கள்

ஈரோடு

வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஆதித்தமிழர் பேரவையினர்

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற  தங்களது கோரிக்கையை தொடர்ந்து அதிகாரிகள் புறக்கணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு அளித்தனர்.

ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில்  மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

இது குறித்து ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த வரப்பாளையம் பகுதியில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தனித்தனியே இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நம்பியூர் தாசில்தாரிடம் மனு கொடுத்து இருந்தோம்.

தகுதியுள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தும் அந்த உத்தரவை அதிகாரிகள் மதிக்க வில்லை.
அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை புறக்கணிப்பதால் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்திருக்கிறோம், என்றனர்.
இதில், மாவட்ட தலைவர் குருநாதன், தலைமை நிலையச் செயலர் வீரவேந்தன், தொழிலாளர் பேரவை கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வீரகோபால், சின்னசாமி அன்பரசு, தங்கமணி உட்பட பலர் உடன் சென்றனர்.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top