திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்ப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென் கயிலாயம் எனப் போற்றப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்.இங்கு மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் சிவனை மனம் உருகி வழிபட்டால் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக சுக பிரசவ ஸ்தலம் என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு. மேலும் மலைக்கோட்டை திருச்சியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்தரத்திற்கு முந்தைய நாளில் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து 16 ஆம் தேதி முதல் காலை 8 மணிக்கு பல்லக்கு புறப்பாடும் இரவு 7 மணிக்கு சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் வலம் வருகின்றனர். 17ஆம் தேதி சுவாமி பூத வாகனம் அம்பாள் கமலவாகனம், 18ஆம் தேதி சுவாமி கைலாச பருவத வாகனம் அம்பாள் அன்ன வாகனம், 19ஆம் தேதி சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம் ,20ஆம் தேதி சுவாமி யானை வாகனம் அம்பாள் கண்ணாடி பல்லக்கு, 21ஆம் தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம் அம்பாள் சிம்ம வாகனம், 22ஆம் தேதி சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லக்கு ஆகிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடு செய்யப்பட்டு வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 23ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு மேல் தெப்ப திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்தி களுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் மாலை 5 மணிக்கு மேல் தெப்பத்திற்கு செல்ல புறப்பாடு செய்யப்படும்.
இரவு 7 மணிக்கு தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி அம்பாள் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். தொடர்ந்து 24ஆம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் மாலை 6 மணிக்கு சேர்த்தி சேவை புறப்படும் இரவு 10 மணிக்கு அவவேராகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை மற்றும் கோவில் ஊழியர்களும் பணியாளர்களும் செய்து வருகிறார்கள்.