Close
மே 13, 2024 3:51 காலை

பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம்: ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெறச் செய்தால் ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும் அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் மத்திய ஆளும் கட்சி பாரதிய ஜனதா எதிர்க்கட்சி காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நடத்தி வருகிறார். மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை தற்போது மராட்டிய மாநிலத்தில் நடந்து வருகிறது. மராட்டியத்தில் இரண்டாவது நாளாக நேற்று யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி துலே என்ற இடத்தில் பெண்கள் திரளாக பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

எனது முதல் கட்ட பாரத ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரை நான்காயிரம் கி.மீ. நடைபெற்றது. அப்போது ஏராளமான விவசாயிகள் பெண்கள் மற்றும் இளைஞர்களை சந்தித்தேன். அநீதிக்கு வன்முறை மற்றும் வெறுப்பு தான் காரணம் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். எனவே தற்போது மணிப்பூரில் இருந்து மும்பைக்கு நடைபெறும் எனது இரண்டாவது கட்ட யாத்திரை பெயரில் நீதி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா அரசு தொழில் அதிபர்களுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதைவிட பெரிய அநீதி எதுவும் இல்லை. நாடாளுமன்ற மற்றும் சட்டசபைகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பாரதிய ஜனதா அரசு பெண்களை ஏமாற்றி வருகிறது. அவர்கள் கொண்டு வந்த இட ஒதுக்கீடு சட்டத்தால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். ஆனால் மத்தியில் நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை எங்கள் அரசு உடனடியாக அமல்படுத்தும்.

இந்த தருணத்தில் பெண்களுக்கு ஐந்து முக்கிய உத்தரவாதங்களை அறிவிக்க  இருக்கிறேன். தேர்தல் நீங்கள் எங்களை வெற்றி பெற செய்தால் ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்நேரடியாக செலுத்தப்படும். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள் ஆஷா ஊழியர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதி இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும். பெண்களின் உரிமை மற்றும் உதவிக்காக கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்படுவர். பெண் சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலே பெயரில் நாட்டில் மாவட்டத் தொடரும் பெண்களுக்கு விடுதிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல் காந்தி பொதுக்கூட்ட மேடையில் பெண்களுக்கு ஐந்து வாக்குறுதிகள் அளிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் மகாலட்சுமி உத்திரவாத திட்டத்தின் கீழ் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்துவது காங்கிரஸின் உத்தரவாதம். அதிகாரம் மைத்திரி அல்லது கண்காணிப்பு அதிகாரி மூலம் பெண்களின் உரிமை மற்றும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எங்களின் உத்தரவாதம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. அவை வெற்று கோஷம்அல்ல என்று கூறி உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top