Close
டிசம்பர் 4, 2024 8:27 காலை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அபிஷேகத்திற்கு முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்த பெண் பக்தை.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2025ம் ஆண்டுக்கான அபிசேகத்திற்காக, கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு நேற்று துவங்கியது. முதல் நாளில், கட்டளைதாரர்கள் 47 நாட்களுக்கு முன்பதிவு செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோட்டை பகுதியில், ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வணங்கிய நிலையில் சாந்த சொரூபமாக ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ஆஞ்சநேயருக்கு தினசரி, காலை 9 மணிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்படும். தொடர்ந்து 10 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். வடைமாலை சாத்துபடி அலங்காரம் மற்றும் அபிசேகம் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே நடைபெறும். கட்டளைதாரர்கள் மூலம் இந்த அபிசேகத்திற்கு, ஆண்டு தோறும், டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு துவக்கப்படும்.

2025ஆம் ஆண்டுக்கான முன்பதிவு, நேற்று கோயில் வளாகத்தில் துவங்கியது. ஒரு நாளில், தலா ரூ. 7,000 வீதம், கட்டணம் செலுத்தி 6 பேர் அபிசேகத்திற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஒருவரே ரூ. 42,000 கட்டணம் செலுத்தி, ஒரு நாள் முழு அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முன்பதிவு துவங்கிய முதல் நாளில், 2025ஆம் ஆண்டு 47 நாட்களுக்கு வடைமாலை மற்றும் அபிஷேகத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டது. தொடர் மழை காரணமாக, பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. அதனால், முன்பதிவும் குறைவாக நடைபெற்றது.

இன்று, 318 நாட்களுக்கு முன்பதிவு நடைபெற உள்ளதால், பக்தர்கள் விரைவில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என கோயில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top