Close
நவம்பர் 21, 2024 5:11 மணி

தோழமைக் கட்சியினரை அனுசரித்து களப்பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு சு.முத்துசாமி அறிவுரை..!

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ் அறிமுகம் செய்து அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.

ஈரோட்டில் “இந்தியா” கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுகடையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மதிமுக சார்பில் எம்.பி. கணேசமூர்த்தி, சிபிஎம் சார்பில் மாவட்டத் தலைவர் மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் சாதிக், காங்கிரஸ் சார்பில் குப்பண்ண சந்துரு, விஜய் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ. ஈ. வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தற்போதைய பிரதமர் சர்வாதிகாரியாக உருவெடுப்பார். இது நாட்டின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல மக்களுக்கும் கேடாகவே முடியும். இந்தத் தேர்தலில் நம்முடைய சந்ததிகளின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது. திமுக வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கே.ஈ.பிரகாஷ், திமுக பாரம்பரியமிக்கவர்.

இவர் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றால் மக்களுக்கு வேண்டிய நலத்திட்டங்களை கட்டாயம் பேசுவார். எனவே இத்தொகுதியில் அவரை வெற்றி பெறச்செய்து அமைச்சர் சு.முத்துசாமி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்க வேண்டும். நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் போது எனது வெற்றிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி நேரில் பிரசாரம் செய்ததுடன், எனது வெற்றிக்காக அமைச்சர் முத்துசாமி முழுமையாக பாடுபட்டு வெற்றியைத் தேடித் தந்தார்.

அதேபோன்ற வெற்றியை இந்த முறையும் அமைச்சர் முத்துசாமி பெற்றுத் தருவார். இவ்வாறு அவர் பேசினார்.

ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ் அறிமுகம் செய்து அமைச்சர் சு.முத்துசாமி பேசியது:
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டு இங்கு வந்துள்ளோம். அங்கு சென்ற இடமெல்லாம் பெருங்கூட்டம். இங்கு எப்படி இருக்குமோ என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கும் பெரிய அளவில் கூட்டம் கூடி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஈரோடு தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்று அதனை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்பணிப்போம். இந்த தொகுதியின் வெற்றிக்காக கூட்டணி கட்சிககள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கடந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 66,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிரூபித்து விட்டார்கள்.

இந்த முறை நாம் வெற்றி பெற மக்களை நேரில் சந்தித்து அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். மக்களின் மனதில் உதயசூரியன் சின்னம்தான் இருக்கிறது.

இந்த தேர்தல் வெற்றி மிக முக்கியமானது.
சென்னையிலும், தூத்துக்குடியிலும் ஏற்பட்ட பெரும் புயல் மழை பாதிப்புகளுக்கு ஆளான போது திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் தான் மக்கள் பணியாற்றியது. மக்களுக்காக எந்த உதவியும் செய்து தர மத்திய அரசு முன் வராததுடன் இதுவரை எந்த நிவாரண நிதியயும் வழங்கவில்லை. கடும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு மக்களின் மீட்புப்பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்து மக்களைக் காத்தது.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, ஒரு கோடியே 17 லட்சம் மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்கியது, தற்போது மலைப்பகுதிகளில் நகரப் பேருந்து இல்லாத இடங்களில் மஃப்சல் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான உத்தரவுகளை வழங்கி இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து நம்முடைய வெற்றியை உறுதிப்படுத்த தோழமைக் கட்சிகள் முன் வர வேண்டும்.

இதே போல திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் மகளிரும் தனித்தனி குழுவாகச் சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும். கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த பிறகு கல்லூரிகளில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறைகள் தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதையும், இத்திட்டத்தின் மூலம் பல லட்சம் பேர் பயனடைந்து இருப்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

ஈரோடு தொகுதியைப் பொறுத்தவரையிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து முடித்துள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்டமான சோலார் பேருந்து நிலையம் கட்டும் பணி இன்னும் 4 மாதங்களில் நிறைவு பெறும். இதே பகுதியில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சத்தி சாலையில் மேலும் ஒரு பேருந்து நிலையம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி விட்டது.

இது தவிர சோலார் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கியமான தேர்தல் ஆகும் எனவே திமுகவினர் தோழமைக் கட்சியினருடன் அனுசரித்து தேர்தல் களப்பணியாற்றி பெரும் வெற்றியை ஈட்டித் தர வேண்டும்.

வரும் 31ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு வருகை தர இருக்கிறார். கரூர் ரோட்டில் ஈரோடு, நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்வார். வரும் 25ஆம் தேதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்வார். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

செய்தி: நாராயணசுவாமி.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top