Close
மே 12, 2024 12:07 காலை

திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இட நெருக்கடி: சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்..!

இட நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகம்

திருவண்ணாமலையில் போதிய இட வசதி இல்லாத கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இணை சார் பதிவாளர் அலுவலகம் – 2 இயங்கி வந்தது.

இந்த அலுவலகம் பழைய கட்டிடமாக இருந்த காரணத்தினாலும், போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.

எனவே இங்கு இயங்கி வந்த சார் பதிவாளர் அலுவலகம் – 2 தற்காலிகமாக திருவண்ணாமலை வேட்டவலம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது.

இந்த பதிவாளர் அலுவலகத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200 க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகும். இதனால் எப்போதுமே கூட்டம் அதிகம் இருக்கும் ஒரு அலுவலகமாகும்.

அதிலும் திருமண நாள், முக்கிய விசேஷ நாட்கள், நல்ல நாட்கள் எனில் 300 க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிய பொதுமக்கள் வருகை தருவர்.
இந்நிலையில் இப்பொழுது மாற்றப்பட்டுள்ள கட்டிடத்தில் அலுவலக ஊழியர்கள் அமர்வதற்கே போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.

இப்பொழுது உள்ள அலுவலகம் தீப்பெட்டியை போல் உள்ளதாகவும், சார் பதிவாளர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரையும், பொதுமக்களும் போதிய காற்றோட்டம் இல்லாமல் புழுக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடிகள் ஏற்படுகின்றதாம். இந்நிலையில் சுப முகூர்த்த தினங்களில் சுமார் 300 பேர் பத்திரங்கள் பதிவு செய்ய ஆன்லைனில் பணம் செலுத்தி டோக்கன் பெற்றுள்ளனர். பிறகு பத்திரங்களை பதிவு செய்ய அலுவலகத்துக்கு சென்றபோது அவர்கள் அமர்வதற்கும் நிற்பதற்கும் கூட இட வசதி இல்லாமல் சாலையிலும் ,கொளுத்தும் வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் திருவிழாவைப் போல் ஆண், பெண், வயதானவர்கள் பாகுபாடு இல்லாமல் முண்டியடித்ததால் அலுவலர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனைவரும் வியர்வையால் தவித்தனர். அலுவலகத்திற்கு நிற்க இடமில்லாததால் அந்த வணிக வளாகத்தில் உள்ள படிக்கட்டுகள் நடக்கும் பாதைகள் என அனைத்து இடங்களிலும் அமர்ந்திருந்தனர்.
பத்திரப்பதிவு செய்ய வருவோர் ,புகைப்படம் எடுப்போர், கைரேகை பதிவு செய்பவர் சார் பதிவாளர் போன்ற ஊழியர்களை சூழ்ந்து கொண்டு நிற்பதால் ஊழியர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி மூச்சு விட முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்தக் கொடுமை எல்லாம் ஒரு புறம் இருக்க பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை சர்வர் கோளாறு வேறு ஏற்பட்டு பத்திரங்களை பதிவு செய்ய முடியாத நிலையில் ஏற்படுகிறதாம், இதனால் பொதுமக்கள் கூடுதலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அதிகப்படியான பத்திரங்கள் பதிவு செய்ய வரும் சூழலில் சர்வர் கோளாறும் ஏற்படுவதால் ஊழியர்கள் பத்திர எழுத்தார்கள் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் உரிய நேரத்திற்குள் சாப்பாட்டிற்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பத்திரப்பதிவு செய்ய வருவோர் சர்வர் வேலை செய்யும் போதே என்னுடைய பத்திரத்தை முதலில் முடித்துக் கொடுங்கள் என நிர்பந்தம் செய்வதால் ஊழியர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே போதிய இட வசதி இல்லாத இந்த கட்டிடத்தில் இருந்து சார் பதிவாளர் இணை அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும், இனிவரும் கோடை காலத்தில் இந்த கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கினால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top