Close
நவம்பர் 24, 2024 7:16 காலை

வெறிச்சோடிய நாமக்கல் பழைய பேருந்து நிலையம் : கவலையில் கடை உரிமையாளர்கள்

நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் துவக்கப்பட்டதால் பழைய பேருந்து நிலையம் களையிழந்தது. இதனால் பேருந்து நிலைய வியாபாரிகள் கடும் கவலையடைந்துள்ளனர்.

நாமக்கல் பேரூராட்சியாக இருந்த காலம் முதல் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது நாமக்கல் மாவட்ட தலைநகரமாக, நகராட்சி மாநகராட்சியாக விரிவடைந்துள்ளது.
இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது. இதையொட்டி, நாமக்கல் சேலம் ரோடு முதலைப்பட்டி அருகில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நாமக்கல் வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அங்கு சுமார் 50 பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று 10ம் தேதி முதல், புறநகர் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் உமா மேற்பார்வையில் மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
சேலம், ஈரோடு, மோகனூர், கரூர், திருச்சி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து திரும்பி சென்றன.
துறையூர், திருச்சி, மோகனூர் செல்லும் பேருந்து மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று வருகின்றன.
மற்ற பேருந்துகள் அனைத்தும் பை-பாஸ் ரோடு வழியாக செல்கின்றன. இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்துள்ளது.
இந்த நிலையில் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நகரப் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மட்டும் வந்து செல்கின்றன. இதனால் இரவு பகல் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி பழைய பேருந்து நிலையம் பயணிகள் நடமாட்டம் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.
பேருந்துகள் நிற்கும் இடங்கள் காலியாக கிடக்கிறது. சுமார் 50 ஆண்களுக்கு மேலாக பேருந்து நிலைய கட்டிடத்தில் இயங்கி வந்த ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்டிக்கடைகள், டீக்கடைகள், ஜூஸ் கடைகள், செல்போன் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் உள்ளன.
இதனால் கடை உரிமையாளர்களும், பணியாளர்களும் செய்வதறியாமல் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top