Close
நவம்பர் 23, 2024 9:52 காலை

வேலைசெய்யும் நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு ‘உள்ளக குழு’ அமைக்க உத்தரவு..!

கோப்பு படம்

நாமக்கல்:
10 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வருகிற 30ம் தேதிக்குள் ‘உள்ளக குழு’ (Internal Committee) அமைக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

இது குறித்த நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண் பணியாளர்கள் பணிபுரிந்தால், அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், உள்ளக குழு (இண்டர்னல் கமிட்டி) அமைக்கப்பட வேண்டும்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கம், நிறுவனங்கள், கிராம பஞ்சாயத்துகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், பேங்குகள், போலீஸ் நிலையங்கள், ஹாஸ்டல்கள், லாட்ஜ்கள், ஓட்டல்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வாளகங்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில், 10-க்கும் மேற்பட்ட (ஆண், பெண் இருபாலரும்) பணியாளர்கள் உள்ள இடங்களில் 5 நபர் கொண்ட உள்ளக குழு அமைக்க வேண்டும்.

மேலும், அங்கு ஒரு புகார் பெட்டியும் அமைக்கப்பட வேண்டும். அந்த குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் குழு அமைக்கப்பட்ட உடன் உறுப்பினர்களின் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் dhewnamakkal2023@gmail.com <mailto:dhewnamakkal2023@gmail.com> என்ற இ-மெயில் முகவரிக்கு வருகிற நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top