Close
நவம்பர் 18, 2024 8:25 காலை

உஷாரய்யா… உஷாரு…! செல்போன் மெசேஜ் மூலம் வங்கி கணக்கில் நூதன மோசடி..!

போலி எஸ்எம்எஸ் மாதிரி (பைல் படம்)

நாமக்கல் :

செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் ஸ்மார்ட் செல்போன்கள் உபயோகித்து வருகின்றனர். ஆண்ட்ராய்ட் போன் மூலம் பல்வேறு அப்ளிஷேனை டவுன் லோடு செய்து அதன் மூலம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இ-மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தளங்கள் மூலம் செய்தி, சினிமா, இசை போன்றவற்றை பார்ப்பதற்கு பலரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பெரும்பாலானவர்கள் கூகுள் பே, போன்பே போன் அப்ளிகேஷன்கள் மூலம், செல்போனில் இருந்து பணம் செலுத்தி பொருட்களை வாங்குகின்றனர். பெரும்பாலான வியாபாரிகள் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட், மொபைல் பேங்கிங் மூலமே பணம் அனுப்புகின்றனர் மற்றும் பெறுகின்றனர்.

ஓட்டல்கள், லாட்ஜ்கள், பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட கடைகளில் கியூஆர் கோடு மூலம் பலர் பணம் செலுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி, செல்போன் மூலம் மோசடி செய்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை திருடும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் செல்போன் நம்பர்களை ஹேக் செய்து பல வகையில் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் பேங்கில் இருந்து பேசுகிறேன் உங்கள் ஏடிஎம் கார்டு நம்பர் கூறுங்கள் என்று பேசி ஏடிஎம் கார்டு நம்பர் மற்றும் ஓடிபி பெற்று பணத்தை அவர்களின் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்து வந்தனர்.

இது மிகவும் பிரபலமாகி, மீம்ஸ் ஆக மாறி வைரல் ஆனதால் மோசடி கும்பல் புதிய முறையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலமாக பொதுமக்களின் செல்போனுக்கு அவர்கள் கணக்கு வைத்துள்ள பேங்கில் இருந்து வருவது போல் ஒரு மெசேஜ் எஸ்எம்எஸ் மூலம் வருகிறது. அதில் உங்கள் கணக்கில் ரூ. 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பிடித்தம் செய்துள்ளோம் (ஹோல்ட்), அதை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் நாங்கள் அனுப்பியுள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் என்று மெசேஜ் அனுப்புகின்றனர்.

வழக்கமாக யாராவது நமக்கு தவறாக பணம் அனுப்பி அவர்கள் நமது பேங்கிற்கு புகார் செய்தால், பேங்கில் இதுபோன்று பணத்தை ஹோல்டு செய்து வைத்து நமக்கு இதுபோன்ற மெசேஜ் அனுப்புவார்கள்.

நாம் பேங்கிற்கு நேரில் சென்றோ, போன் செய்தோ விபரம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். மோசடி பேர்வழிகள் அனுப்பிய வெப்சைட் லிங்கிற்கு லாக் ஆன் செய்தால் நமது வங்கி அக்கவுண்ட் நம்பர், யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகிய விபரங்களை கேட்கிறது. அதைக் கொடுத்ததும் மோசடி ஆசாமிகள் அதைப் பயன்படுத்தி நமது கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக அபகரித்து விடுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

எந்த வங்கியும் மெசேஜ் அனுப்பி அதில் லாக் ஆகக்கூறி வெப்சைட் லிங்க் அனுப்ப மாட்டார்கள். அதே போல் போன் செய்து ஓடிபி கேட்க மாட்டார்கள். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனுக்கு இதுபோன்ற மோசடி மெசேஜ்கள் மற்றும் லிங்க் வந்தால், அதை கிளிக் செய்யக் கூடாது.

நேரடியாக வங்கியை தொடர்புகொண்டு அந்த மெசேஜ் குறித்த விபரத்தை கேட்டு விபரம் தெரிந்துகொள்ள வேண்டும். சைபர்கிரைம் மோசடி பேர்வழிகள் பல்வேறு வழிகளில் மோசடியில் ஈடுபட்டு வருவதால் ஆன்லைன் கணக்கு வைத்துள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top