Close
நவம்பர் 26, 2024 4:23 மணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் நிலையை பாதுகாத்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு செய்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (நவ.26) ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் உட்பட 10 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் என 400-க்கும் மேற்பட்ட வருவாய் ஊழியர்கள் பணியை புறக்கணித்து அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 2 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பு ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும், பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் 5 சதவீதத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கிடையே வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு உதவித்தொகை வேண்டி வருபவர்கள், ஜாதி சான்றிதழ் போன்ற பல்வேறு அரசு ஆவணங்கள் பெறுவதற்காக வந்த பொது மக்கள் அலுவலர்களை சந்திக்க முடியாமல் திரும்பி சென்றதால் அவதியடைந்தனர்.

வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தை அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top