நாமக்கல்:
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலத்திற்கும், நாமக்கல் நகருக்கும் கி.மீ. அடிப்படையில் பஸ் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என ஜனதா கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் மாநகராட்சி மூலம், முதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நவ. 10 முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், சேலத்தில் இருந்து நாமக்கல், திருச்சி, கரூர் செல்லும் பஸ்கள், நாமக்கல் வருவதற்கு கட்டணமாக, அரசு எக்ஸ்பிரஸ் பஸ்சில் ரூ. 45, தனியார் பஸ்சில் ரூ. 36 வீதம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல், சேலம் சீலநாய்க்கன்பட்டி பைபாசில் இருந்து, நாமக்கல் செல்ல, அரசு எக்ஸ்பிரஸ் பஸ்சில் ரூ. 40, தனியார் பஸ்சில் ரூ. 31 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்த பின், சேலத்தில் இருந்து நாமக்கல் வரும் தூரம் சுமார் 6 கி.மீ. குறைந்துள்ளது. இருப்பினும் சேலத்தில் இருந்து நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்களில் கட்டணம் குறைக்காமல், அதே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல, மப்சல் பஸ்சில் ரூ. 10, டவுன் பஸ்சில் ரூ. 7 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கி.மீ அடிப்படையில் கணக்கிட்டு பஸ் கட்டணம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஜனதா கட்சி தலைவர் பழனியப்பன், பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர், நாமக்கல் கலெக்டர் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளிடம் இது குறித்து மனு அளித்துள்ளனர்.