Close
ஏப்ரல் 3, 2025 1:45 காலை

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் காயம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்ஏஎம் எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மாணவர்களை ஏற்றி வருவது வழக்கம். அதேபோல், இன்று காலை அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு சென்ற வாகனம் ஒன்று 10க்கும் மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது.
இந்த வாகனத்தை அம்மாபேட்டையைச் சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் ஓட்டினார். இந்நிலையில், அந்த பள்ளி வாகனம் அம்மாபேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக சென்று கொண்டு இருந்தது.
அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த 6 மாணவிகள், 3 மாணவர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top