Close
டிசம்பர் 12, 2024 6:47 மணி

நாமக்கல்லில் இருந்து விழுப்புரம், கடலூருக்கு ரூ. 68.87 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு : அமைச்சர் தகவல்..!

நாமக்கல் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் வழங்கினார்கள். அருகில் கலெக்டர் உமா

நாமக்கல் :

புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 10 லாரிகளில் ரூ. 68.87 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

ராஜ்யசபா எம்.பி.ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் மழையினால் வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு வீடுகளை சீரமைக்க 10 பேருக்கு தலா ரூ.4,000 மற்றும் ஒருவருருக்கு ரூ.8,000 என மொத்தம் ரூ.48,000 நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 1 பாக்கெட் பிஸ்கட், 1 பாக்கெட் பிரட், மளிகைப் பொருட்கள், 2 சேலைகள், 2 வேட்டிகள், சமையல் பாத்திரங்கள், பாய், போர்வை, கம்பளி, கொசுவலை, படுக்கை விரிப்பு, பக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு ரூ. 10.33 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான நிவராண பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகளை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெஞ்சல் புயலால் விழுப்புரம் மற்றும் கடலூர் பொதுமக்களுக்கு, இதுவரை 10 லாரிகளில் மொத்தம் ரூ.68.87 லட்சம் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top