Close
டிசம்பர் 18, 2024 2:43 மணி

வேதியியல் முதுகலை ஆசிரியர்களுக்கான டிஆர்பி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க ஆசிரியர்கள் வேண்டுகோள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு.

முதுகலை ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில், வேதியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக்கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலமாகவும், மீதி உள்ள 50 சதவீதம் முதுகலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி போட்டித்தேர்வின் மூலமும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஒவ்வொரு பாடத்திற்கும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 2000-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான், கடந்த 2022 ஆம் ஆண்டு வரை முதுகலை ஆசிரியர் நேரடி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நடப்பாண்டு முதல், முதுகலை ஆசிரியர் தேர்வு புதிய பாடத்திட்டத்தின் படி நடைபெறும்என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டங்கள் தமிழ்நாடு அரசிதழில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இப்பாடத்திட்டத்தில் வேதியியல் நீங்கலாக பிற பாடங்களுக்கு சிறிதளவு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருந்தன. ஆனால் வேதியியல் பாடத்திற்கு மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்படும் வேதியியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பாடத்திட்டத்தை விட 30 முதல் 50 சதவீதம் வரை பாடத்திட்டம் மிக அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பதற்கு இவ்வளவு கடினமான பாடத்திட்டத்தை கொடுத்திருப்பதன் மூலம் போட்டித் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுத தயார்படுத்தும் வகையில் அதனை ஒத்த பாடத்திட்டமாக இதை மாற்றி அமைக்க வேண்டும். எனவே இந்த விசயத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு வேதியியல் பாடத்திற்கான புதிய பாடத்திட்டத்தை மறு சீராய்வு செய்ய குழு அமைத்து, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை விரைவில் வெளியிட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top