மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பராமரிப்பு பணிகள் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பி. மூர்த்தி ஆகியோர் இன்று (16.12.2024) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், தென் தமிழகத்தின் மிக முக்கிய நகராக விளங்கும் மதுரையில் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. மழையின் காரணமாக நூலகத்தில் மழைநீர்க்சிவு, மழைநீர் தேக்கம் போன்று ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் கசிவு ஏதும் ஏற்படவில்லை.
நூலகத்தின் பராமரிப்பு குறித்து பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் தொடர்ந்து நேரடி ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். நூலகம் தொடங்கப்பட்டு இதுவரை 13,59,996 பார்வையாளர்கள் வருகை தந்து பயன்பெற்றுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,650 பார்வையாளர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் , நூலகத்தில் பொதுமக்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். அதேபோல வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் சொந்த புத்தகங்களை வாசிப்பதற்கு ஏதுவாக தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், 30.10.2023-அன்று மதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலங்கள் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
அப்பல்லோ சந்திப்பு சாலை மேம்பால கட்டுமானப்பணிகள் 32 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இக்கட்டுமான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் ஒப்பந்த காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு 2025 ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் 66,000 கிலோ மீட்டர் நீளம் சாலைகள் உள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தேவைக்கேற்ப சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலைகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக ‘நம்ம சாலை’ என்ற செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது. புகார்கள் மீது 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, மாவட்டயர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), பூமிநாதன் (மதுரை தெற்கு) , பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, மதுரை மண்டல தலைமை பொறியாளர் (பொதுப்பணித்துறை) செல்வராஜன், கண்காணிப்பு பொறியாளர் (பொதுப்பணித்துறை) அய்யாசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.