Close
டிசம்பர் 19, 2024 4:39 மணி

நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக சாலை விபத்து வழக்கில் ரூ. 5 கோடி இழப்பீடு

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்து வழக்கில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்ட கோர்ட் சமரச மையத்தில், ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகில் உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் (36), இவருக்கும், நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி சுஷ்மிதா (30) என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாஷ்வினி என்ற பெண் குழந்தை இருந்தார்.

கவுதம் எம்.இ. (மெகட்ரானிக்ஸ்) படித்து முடித்துவிட்டு, அபுதாபி நாட்டில் தனியார் கம்பெனி ஒன்றில் பைப்பிங் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு, தனது மனைவி சுஷ்மிதாவுக்கு மகன் பிறந்தது. மகனைப் பார்ப்பதற்காக கவுதம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி நாமக்கல் வந்தார்.

நாமக்கல் தில்லைபுரத்தில் உள்ள மாமனார் வீட்டில் இருந்த, மனைவி சுஷ்மிதாவையும், பிறந்த ஆண் குழந்தையும் பார்த்துவிட்டு ஆண் குழந்தைக்கு கவினேஷ் என்று பெயர் சூட்டினார்.
இந்த நிலையில் 2023 செப். 12ம் தேதி டூ வீலர் ஒன்றில், 4வது வகுப்பு படிக்கும், தனது மகள் யாஷ்வினி (9) என்பவரை, தனியார் பள்ளியில் விடுவதற்காக, கவுதம் டூ வீலரில் அழைத்துச்சென்றார்.

நாமக்கல் திருச்சி மெயின் ரோட்டில் நாகராஜபுரம் அருகே அவர் சென்றபோது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று அவர் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோர் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தனது கணவர் இறந்தததற்காக இழப்பீடு கேட்டு, கவுதமின் மனைவி சுஷ்மிதா, சரக்கு ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மீது நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இருதரப்பினர் சம்மதத்தின் பேரில், நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் உதவிக்குழு மூலம் இந்த வழக்கு விசாரணை மாவட்ட சமரச மையத்தில் நடைபெற்றது.

வாதி தரப்பில் வக்கீல் வடிவேல் ஆஜரானார், விசாரணை முடிவில் விபத்தில் இறந்த கவுதமின் மனைவி சுஷ்மிதா குடும்பத்திற்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க கோர்ட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தனியார் இன்சூரனஸ் கம்பெனி ரூ. 5 கோடி இழப்பீடு வழங்குவதற்கான உத்தரவை, மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, சுஷ்மிதாவிடம் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சாலை விபத்து வழக்கில் அதிகபட்சமாக ரூ. 5 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top