Close
ஜனவரி 8, 2025 3:41 மணி

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி உற்சவம் 1,00,008 வடை மாலை அலங்காரம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் கோட்டையில் புராண சிறப்புப் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம், அமாவாசை, மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்வதற்காக 1 லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 25ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

நேற்று இந்த பணிகள் முடிவடைந்து வடைகள் மாலைகளாக கோர்க்கப்பட்டன. நள்ளிரவு முதல் 20 க்கும் மேற்பட்ட கோயில் பட்டாச்சாரியார்கள் சாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு திரை விலக்கப்பட்டு மகா தீபாரதனை  நடைபெற்றது.
இன்று 11 மணிக்கு வடை மாலை அலங்காரம் கலைக்கப்பட்டு, நல்லெண்ணை, 1008 லிட்டர் பால், தயிர், திருமஞ்சள், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம் போன்ற வாசனைப் பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

பின்னர் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனை நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
ஆஞ்சநேயருக்கு சார்த்துவதற்காக, ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு லட்சத்து 8 வடை தயாரிப்பதற்கு 90 மூட்டை உளுத்தம் பருப்பு, 200 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ சீரகம் மற்றும் மிளகு, 135 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டது.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட கியூவில் காத்துள்ளனர்.

இதையொட்டி பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோயில் பகுதிகளிலும், கோயில் அமைந்துள்ள தெருக்களிலும் பேரிகார்டு அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக நாமக்கல்லில் கோட்டை ரோடு, பார்க் ரோட்டில் எம்ஜிஆர் ஆர்ச்சில் இருந்து மதுரை வீரன் கோவில் வரை முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

கோயில் அமைந்துள்ள நாமக்கல் கோட்டை பகுதி முழுவதும் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இயைராஜா, அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் டாக்டர் மல்லிகா, சீனிவாசன், செல்வ சீராளன், ரமேஷ்பாபு மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top