நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நாமக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்தார். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் அருணா பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் இருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கி திருச்செங்கோடு மெயின் ரோட்டில் நடைபெற்றது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு 8 கி.மீ., மற்றும் 10 கி.மீ., என 2 பிரிவில் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கு 5 கி.மீ., தூரம் போட்டி நடைபெற்றது.
நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மற்றும் 4 முதல் 10 இடங்களுக்குள் வந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பின்னர் பரிசுத் தொகை வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.