Close
பிப்ரவரி 23, 2025 10:07 காலை

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ.1.36 கோடி மதிப்பில் திருப்பணி: அமைச்சர் சேகர்பாபு அனுமதி

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் ரூ. 1.36 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்க, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுமதி அளித்தார்.
நமக்கல் மாவட்டம் மோகனூரில், காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, சுவாமி மதுகரவேணி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

இங்கு ஏற்றப்பட்டுள்ள தீபம், எவ்வளவு காற்றடித்தாலும் அணையாத தீபமாக சுடர்விட்டு எரிவதால், சுவாமிக்கு அசலதீபேஸ்வரர் என்ற பெயர் உள்ளது. இந்த கோயிலில், 2008ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அரசுக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதையடுத்து, இந்து சமய அறநிலைத்துறை மூலம் கோயில் திருப்பணிக்காக ரூ. 89 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உபயதாரர்கள் பங்களிப்பாக ரூ. 47.50 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ. 1 கோடியே, 36 லட்சத்து, 50,000 மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சுவாமி தரிசனம் செய்த அவர், கோயிலை சுற்றி வந்து ஆய்வு செய்தார்.

அப்போது, கோயில் கும்பாபிஷேக திருப்பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு, மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார்.

நிகழ்ச்சியில் ராஜேஸ்குமார், எம்.பி., எம்.எல்.ஏ. ராமலிங்கம், அட்மா தலைவர் நவலடி, மோகனூர் பேரூராட்சி திமுக செயலாளர் செல்லவேல், பேரூராட்சி தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top